சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.133   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வெந்த வெண்பொடிப் பூசும் மார்பின்
பண் - மேகராகக்குறிஞ்சி   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=AbtH6ieiJGM
2.012   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மறையானை, மாசு இலாப் புன்சடை
பண் - இந்தளம்   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=luXBEgyYc0s
3.041   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கரு ஆர் கச்சித் திரு
பண் - கொல்லி   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=G184AcZJfYQ
3.114   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பாயும் மால்விடைமேல் ஒரு பாகனே;
பண் - பழம்பஞ்சுரம்   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=ZKbm_jU5Dms
4.007   திருநாவுக்கரசர்   தேவாரம்   கரவு ஆடும் வன்நெஞ்சர்க்கு அரியானை;
பண் - காந்தாரம்   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=PeHloxiXoQk
4.044   திருநாவுக்கரசர்   தேவாரம்   நம்பனை, நகரம் மூன்றும் எரியுண
பண் - திருநேரிசை   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=CMbzQH4m2vk
4.099   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஓதுவித்தாய், முன் அற உரை;
பண் - திருவிருத்தம்   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=dSuaUHZ0C5U
5.047   திருநாவுக்கரசர்   தேவாரம்   பண்டு செய்த பழவினையின் பயன்
பண் - திருக்குறுந்தொகை   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=0idJg6wLDtI
5.048   திருநாவுக்கரசர்   தேவாரம்   பூமேலானும் பூமகள் கேள்வனும் நாமே
பண் - திருக்குறுந்தொகை   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=jt6rjyXjRF8
6.064   திருநாவுக்கரசர்   தேவாரம்   கூற்றுவன் காண், கூற்றுவனைக் குமைத்த
பண் - திருத்தாண்டகம்   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=fvi9irZiev0
6.065   திருநாவுக்கரசர்   தேவாரம்   உரித்தவன் காண், உரக் களிற்றை
பண் - திருத்தாண்டகம்   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=4sksPIUARVw
7.061   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   ஆலம் தான் உகந்து அமுது
பண் - தக்கேசி   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=w8tRfonamJU
11.029   பட்டினத்துப் பிள்ளையார்   திருஏகம்பமுடையார் திருவந்தாதி   திருஏகம்பமுடையார் திருவந்தாதி
பண் -   (கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) )

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.133   வெந்த வெண்பொடிப் பூசும் மார்பின்  
பண் - மேகராகக்குறிஞ்சி   (திருத்தலம் கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ; (திருத்தலம் அருள்தரு காமாட்சியம்மை உடனுறை அருள்மிகு ஏகாம்பரநாதர் திருவடிகள் போற்றி )
வெந்த வெண்பொடிப் பூசும் மார்பின் விரிநூல் ஒருபால் பொருந்த,
கந்தம் மல்கு குழலியோடும் கடிபொழில் கச்சி தன்னுள்,
அந்தம் இல் குணத்தார் அவர் போற்ற, அணங்கினொடு ஆடல் புரி
எந்தை மேவிய ஏகம்பம் தொழுது ஏத்த, இடர் கெடுமே.

[1]
வரம் திகழும் அவுணர் மா நகர்மூன்று உடன் மாய்ந்து அவியச்
சரம் துரந்து, எரிசெய்த தாழ்சடைச் சங்கரன் மேய இடம்
குருந்தம், மல்லிகை, கோங்கு, மாதவி, நல்ல குரா, மரவம்,
திருந்து பைம்பொழில் கச்சி ஏகம்பம் சேர, இடர் கெடுமே.

[2]
வண்ண வெண்பொடிப் பூசும் மார்பின் வரி அரவம் புனைந்து,
பெண் அமர்ந்து, எரி ஆடல் பேணிய பிஞ்ஞகன் மேய இடம்,
விண் அமர் நெடுமாடம் ஓங்கி விளங்கிய கச்சி தன்னுள்-
திண்ண மாம்பொழில் சூழ்ந்த ஏகம்பம் சேர, இடர் கெடுமே.

[3]
தோலும் நூலும் துதைந்த வரை மார்பில் சுடலை வெண் நீறு அணிந்து,
காலன் மாள் உறக் காலால் காய்ந்த கடவுள் கருதும் இடம்,
மாலை வெண்மதி தோயும் மா மதில் கச்சி மா நகருள்,
ஏலம் நாறிய சோலை சூழ் ஏகம்பம் சேர, இடர் கெடுமே.

[4]
தோடு அணி மலர்க்கொன்றை சேர் சடைத் தூ மதியம் புனைந்து,
பாடல் நால்மறை ஆக, பலகணப் பேய்கள் அவை சூழ,
வாடல் வெண் தலை ஓடு, அனல், ஏந்தி, மகிழ்ந்து உடன் ஆடல் புரி
சேடர் சேர் கலிக் கச்சி ஏகம்பம் சேர, இடர் கெடுமே.

[5]
சாகம் பொன்வரை ஆகத் தானவர் மும்மதில் சாய எய்து,
ஆகம் பெண் ஒருபாகம் ஆக, அரவொடு நூல் அணிந்து,
மாகம் தோய் மணி மாட மா மதில் கச்சி மா நகருள்,
ஏகம்பத்து உறை ஈசன் சேவடி ஏத்த, இடர் கெடுமே.

[6]
வாள் நிலாமதி புல்கு செஞ்சடை வாள் அரவம் அணிந்து,
நாண் இடத்தினில் வாழ்க்கை பேணி, நகுதலையில் பலி தேர்ந்து,
ஏண் இலா அரக்கன் தன் நீள் முடி பத்தும் இறுத்தவன் ஊர்,
சேண் உலாம் பொழில் கச்சி ஏகம்பம் சேர, இடர் கெடுமே.

[7]
பிரமனும் திருமாலும் கைதொழப் பேர் அழல் ஆய பெம்மான்,
அரவம் சேர் சடை அந்தணன், அணங்கினொடு அமரும் இடம்,
கரவு இல் வண்கையினார்கள் வாழ் கலிக் கச்சி மா நகருள்,
மரவம் சூழ் பொழில் ஏகம்பம் தொழ, வில்வினை மாய்ந்து அறுமே.

[8]
குண்டுபட்டு அமண ஆயவரொடும், கூறை தம் மெய் போர்க்கும்
மிண்டர், கட்டிய கட்டுரை அவை கொண்டு விரும்பேன்மின்!
விண்டவர் புரம் மூன்றும் வெங்கணை ஒன்றினால் அவியக்
கண்டவன் கலிக் கச்சி ஏகம்பம் காண, இடர் கெடுமே.

[9]
ஏரின் ஆர் பொழில் சூழ்ந்த கச்சி ஏகம்பம் மேயவனை,
காரின் ஆர் மணி மாடம் ஓங்கு கழுமல நன்நகருள்,
பாரின் ஆர் தமிழ் ஞானசம்பந்தன் பரவிய பத்தும் வல்லார்,
சீரின் ஆர் புகழ் ஓங்கி, விண்ணவரோடும் சேர்பவரே.

[10]

Back to Top
பட்டினத்துப் பிள்ளையார்   திருஏகம்பமுடையார் திருவந்தாதி  
11.029   திருஏகம்பமுடையார் திருவந்தாதி  
பண் -   (திருத்தலம் கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
மெய்த்தொண்டர் செல்லும் நெறியறி
யேன்மிக நற்பணிசெய்
கைத்தொண்டர் தம்மிலும் நற்றொண்
டுவந்திலன் உண்பதற்கே
பொய்த்தொண்டு பேசிப் புறம்புற
மேயுன்னைப் போற்றுகின்ற
இத்தொண்ட னேன்பணி கொள்ளுதி
யோகச்சி ஏகம்பனே.

[1]
ஏகம்ப னேயென்னை ஆள்பவ
னேயிமை யோர்க்கிரங்கி
போகம்பன் னாளும் கொடுக்கின்ற நாயக
பொங்கும்ஐவாய்
நாகம்பொன் னாரம் எனப்பொலி
வுற்றுநல் நீறணியும்
ஆகம்பொன் மாமலை ஒப்பவ
னேயென்பன் ஆதரித்தே.

[2]
தரித்தேன் மனத்துன் திகழ்திரு
நாமம் தடம்பொழில்வாய்
வரித்தேன் முரல்கச்சி ஏகம்ப
னேயென்றன் வல்வினையை
அரித்தேன் உனைப்பணி யாதவர்
ஏழைமை கண்டவரைச்
சிரித்தேன் உனக்கடி யாரடி
பூணத் தெளிந்தனனே.

[3]
தெளிதரு கின்றது சென்றென்
மனம்நின் திருவடிவம்
அளிதரு நின்னருட் கையம்
இனியில்லை அந்திச்செக்கர்
ஒளிதரு மேனியெம் ஏகம்ப
னேயென் றுகந்தவர்தாள்
தளிதரு தூளியென் றன்தலை
மேல்வைத்த தன்மைபெற்றே.

[4]
பெற்றுகந் தேனென்றும் அர்ச்சனை
செய்யப் பெருகுநின்சீர்
கற்றுகந் தேனென் கருத்தினி
தாக்கச்சி ஏகம்பத்தின்
பற்றுகந் தேறும் உகந்தவ
னேபட நாகக்கச்சின்
சுற்றுகந் தேர்விடை மேல்வரு
வாய்நின் துணையடியே.

[5]
அடிநின்ற சூழல் அகோசரம்
மாலுக் கயற்கலரின்
முடிநின்ற சூழ்முடி காண்பரி
தாயிற்றுக் கார்முகிலின்
இடிநின்ற சூழ்குரல் ஏறுடை
ஏகம்ப யாமெங்ஙனே
வடிநின்ற சூலப் படையுடை
யாயை வணங்குவதே.

[6]
வணக்கம் தலைநின் திருவடிக்
கேசெய்யும் மையல்கொண்டோர்
இணக்கன்றி மற்றோர் இணக்கறி
வோமல்லம் வல்லரவின்
குணக்குன்ற வில்லி குளிர்கச்சி
ஏகம்பம் பாடினல்லால்
கணக்கன்று மற்றொரு தேவரைப்
பாடும் கவிநலமே.

[7]
நலந்தர நானொன்று சொல்லுவன்
கேண்மின்நல் லீர்களன்பு
கலந்தர னார்கச்சி ஏகம்பம்
கண்டு கனல்திகிரி
சலந்தரன் ஆகம் ஒழிக்கவைத்
தாய்தக்கன் வேள்வியெல்லாம்
நிலந்தர மாகச்செய் தாயென்று
பூசித்து நின்மின்களே.

[8]
மின்களென் றார்சடை கொண்டலென்
றார்கண்டம் மேனிவண்ணம்
பொன்களென் றார்வெளிப் பாடுதம்
பொன்னடி பூண்டுகொண்ட
என்களென் றாலும் பிரிந்தறி
யார்கச்சி ஏகம்பத்தான்
தன்களென் றாருல கெல்லாம்
நிலைபெற்ற தன்மைகளே.

[9]
தன்மையிற் குன்றாத் தவத்தோர்
இமையவர் தாம்வணங்கும்
வன்மையிற் குன்றா மதிற்கச்சி
ஏகம்பர் வண்கயிலைப்
பொன்மயிற் சாயலுஞ் சேயரிக்
கண்ணும் புரிகுழலும்
மென்மையிற் சாயும் மருங்குலும்
காதல் விளைத்தனவே.

[10]
தனமிட் டுமைதழு வத்தழும்
புற்றவர் தம்மடியார்
மனம்விட் டகலா மதிற்கச்சி
ஏகம்பர் வான்கயிலைச்
சினம்விட் டகலாக் களிறு
வினாவியொர் சேயனையார்
புனம்விட் டகலார் பகலாம்
பொழுதும்நம் பூங்கொடியே.

[11]
பூங்கொத் திருந்தழை யார்பொழில்
கச்சியே கம்பர்பொற்பார்
கோங்கத் திருந்த குடுமிக்
கயிலையெம் பொன்னொருத்தி
பாங்கொத் திருந்தனை ஆரணங்
கேபடர் கல்லருவி
ஆங்கத் திருந்திழை ஆடிவந்
தாற்கண் டடிவருத்தே.

[12]
வருத்தந் தரும்மெய்யுங் கையில்
தழையும்வன் மாவினவும்
கருத்தந் தரிக்கும் நடக்கவின்
றைய கழல்நினையத்
திருத்தந் தருளும் திகழ்கச்சி
ஏகம்பர் சீர்க்கயிலைத்
துருத்தந் திருப்பதன் றிப்புனம்
காக்கும் தொழிலெமக்கே.

[13]
எம்மையும் எம்மைப் பணிகொள்ளும்
கம்பர் எழிற்கயிலை
உம்மையும் மானிடம் இப்புனத்
தேவிட்டு வந்தமைந்தர்
தம்மையும் மானையும் சிந்தையும்
நோக்கம் கவர்கவென்றோ
அம்மையும் அம்மலர்க் கண்ணும்
பெரியீர் அருளுமினே.

[14]
அருளைத் தருகம்பர் அம்பொற்
கயிலைஎம் ஐயர்அம்பு
இருளைக் கரிமறிக் கும்மிவர்
ஐயர் உறுத்தியெய்ய
வெருளக் கலைகணை தன்னொடும்
போயின வில்லிமைக்கு
மருளைத் தருசொல்லி எங்கோ
விலையுண்டிவ் வையகத்தே.

[15]
வையார் மழுப்படை ஏகம்பர்
ஈங்கோய் மலைப்புனத்துள்
ஐயார் வருகலை ஏனங்
கரிதொடர் வேட்டையெல்லாம்
பொய்யான ஐயர் மனத்ததெம்
பூங்கொடி கொங்கைபொறாப்
பையார் அரவிடை ஆயிற்று
வந்து பரிணமித்தே.

[16]
பருமுத் துதிர்த்திடும் சீர்மத்த
யானை நுதல்பகுந்திட்
டுருமொத்த திண்குரற் சீயம்
திரிநெறி ஓங்குவைவாய்ப்
பொருமுத் தலைவேற் படைக்கம்பர்
பூங்கயி லைப்புனத்துள்
தருமுத் தனநகை தன்நசை
யால்வெற்பு சார்வரிதே.

[17]
அரிதன் திருக்கண் இடநிரம்
பாயிரம் போதணிய
அரிதன் திருவடிக் கர்ச்சித்த
கண்ணுக் கருளுகம்பர்
அரிதன் திருக்கங் குலியால்
அழிந்த கயிலையல்லிங்
கரிதென் றிப்பதெம் பால்வெற்ப
எம்மையர்க் கஞ்சுதுமே.

[18]
அஞ்சரத் தான்பொடி யாய்விழத்
தீவிழித் தன்புசெய்வோர்
நெஞ்சரத் தாழ்வுகந் தோர்கச்சி
ஏகம்பர் நீள்கயிலைக்
குஞ்சரத் தாழ்வரை வீழநுங்
கொம்புய்யக் கும்பமூழ்கும்
வெஞ்சரத் தாரன வோவல்ல
வோவிவ் வியன்முரசே.

[19]
சேய்தந்த அம்மை உமைகண
வன்திரு ஏகம்பத்தான்
தாய்தந்தை யாயுயிர் காப்போன்
கயிலைத் தயங்கிருள்வாய்
வேய்தந்த தோளிநம் ஊச
லொடும்விரை வேங்கைதன்னைப்
பாய்தந்து பூசலுண் டாங்கொண்ட
தோசைப் பகடுவந்தே.

[20]
வந்தும் மணம்பெறிற் பொன்னனை
யீர்மன்னும் ஏகம்பர்தம்
முந்தும் அருவிக் கயிலை
மலையுயர் தேனிழிச்சித்
தந்தும் மலர்கொய்தும் தண்தினை
மேயுங் கிளிகடிந்தும்
சிந்தும் புகர் மலை கைச்சுமிச்
சாரல் திரிகுவனே.

[21]
திரியப் புரமெய்த ஏகம்ப
னார்திக ழுங்கயிலைக்
கிரியக் குறவர் பருவத் திடுதர
ளம்வினையோம்
விரியச் சுருள்முத லானும்
அடைந்தோம் விரைவிரைந்து
விரியக் கதிர்முத்தின் நீர்பெற்ற
தென்னங்குப் பேசுமினே.

[22]
பேசுக யாவர் உமைக்கணி
யாரென்று பித்தரெங்கும்
பூசுகை யார்திரு நீற்றெழில்
ஏகம்பர் பொற்கயிலைத்
தேசுகை யார்சிலை வெற்பன்
பிரியும் பரிசிலர்அக்
கூசுகை யாதுமில் லார்க்குலை
வேங்கைப் பெயர்நும்மையே.

[23]
பெயரா நலத்தெழில் ஏகம்ப
னார்பிறை தோய்கயிலைப்
பெயரா திருக்கப் பெறுகிளி
காள்புன மேபிரிவின்
துயரால் வருந்தி மனமுமிங்
கோடித் தொழுதுசென்ற
தயரா துரையும்வெற் பற்கடி
யேற்கும் விடைதமினே.

[24]
தம்மைப் பிறவிக் கடல்கடப்
பிப்பவர் தாம்வணங்கும்
மும்மைத் திருக்கண் முகத்தெழில்
ஏகம்பர் மொய்கயிலை
அம்மைக் கருங்கண்ணி தன்னொடின்
பந்தருந் தண்புனமே
எம்மைக் கவலை செயச்சொல்லி
யோவல்லி எய்தியதே.

[25]
இயங்குந் திரிபுரம் எய்தவே
கம்பர் எழிற்கயிலைத்
தயங்கும் மலர்ப்பொழில் காள்தையல்
ஆடரு வித்தடங்காள்
முயங்கு மணியறை காள்மொழி
யீரொழி யாதுநெஞ்சம்
மயங்கும் பரிசுபொன் னார்சென்ற
சூழல் வகுத்தெமக்கே.

[26]
வகுப்பார் இவர்போல் மணத்துக்கு
நாள்மணந் தன்னொடின்பம்
மிகுப்பார்கள் ஆருயிர் ஒன்றாம்
இருவரை விள்ளக்கள்வாய்
நெகுப்பால் மலர்கொண்டு நின்றார்
கிடக்க நிலாவுகம்பர்
தொகுப்பால் மணிசிந் தருவிக்
கயிலையிச் சூழ்புனத்தே.

[27]
புனங்குழை யாதென்று மென்தினை
கொய்ததும் போகலுற்ற
கனங்குழை யாள்தற் பிரிய
நமக்குறும் கையறவால்
மனங்குழை யாவரும் கண்கனி
பண்பல பாடுந்தொண்டர்
இனங்குழை யாத்தொழும் ஏகம்பர்
இக்கயி லாயத்துள்ளே.

[28]
உள்ளம் பெரியரல் லாச்சிறு
மானுடர் உற்றசெல்வம்
கள்ளம் பெரிய சிறுமனத்
தார்க்கன்றிக் கங்கையென்னும்
வெள்ளம் பெரிய சடைத்திரு
ஏகம்பர் விண்ணரணம்
தள்ளம் பெரிகொண் டமைத்தார்
அடியவர் சார்வதன்றே.

[29]
அன்றும் பகையடர்க் கும்பரி
மாவும் மதவருவிக்
குன்றும் பதாதியுந் தேருங்
குலவிக் குடைநிழற்கீழ்
நின்றும் பொலியினுங் கம்பர்நன்
நீறு நுதற்கிலரேல்
என்றும் அரசும் முரசும்
பொலியா இருநிலத்தே.

[30]
நிலத்திமை யோரில் தலையாய்ப்
பிறந்து மறையொடங்கம்
வலத்திமைப் போதும் பிரியார்
எரிவளர்த் தாலும்வெற்பன்
குலத்துமை யோர்பங்கர் கச்சியுள்
ஏகம்பங் கூடித்தொழும்
நலத்தமை யாதவர் வேட்டுவர்
தம்மின் நடுப்படையே.

[31]
படையால் உயிர்கொன்று தின்று
பசுக்களைப் போலச்செல்லும்
நடையால் அறிவின்றி நாண்சிறி
தின்றிநகும் குலத்தில்
கடையாய்ப் பிறக்கினும் கச்சியுள்
ஏகம்பத் தெங்களையாள்
உடையான் கழற்கன்ப ரேலவர்
யாவர்க்கும் உத்தமரே.

[32]
உத்துங்க யானை உரியார்
விரலால் அரக்கன்சென்னி
பத்துங்கை யான இருபதுஞ்
சோர்தர வைத்திலயம்
ஒத்துங்கை யாலவன் பாடக்
கயிலையின் ஊடுகைவாள்
எத்துங்கை யானென் றுகந்தளித்
தார்கச்சி ஏகம்பரே.

[33]
அம்பரம் கால்அனல் நீர்நிலம்
திங்கள் அருக்கன்அணு
வம்பரங் கொள்வதொர் வேழத்
துரியவன் தன்னுருவாம்
எம்பரன் கச்சியுள் ஏகம்பத்
தானிடை யாதடைவான்
நம்பரன் தன்னடி யாரறி
வார்கட்கு நற்றுணையே.

[34]
துணைத்தா மரையடி யும்பவ
ளத்திரள் நன்குறங்கும்
பணைத்தோள் அகலமுங் கண்டத்து
நீலமும் அண்டத்துமின்
பிணைத்தா லனசடை யுந்திரு
முக்கணும் பெண்ணொர்பக்கத்
தணைத்தார் எழிற்கம்பர் எங்கள்
பிரானார்க் கழகியவே.

[35]
அழகறி விற்பெரி தாகிய
ஏகம்பர் அத்தர்கொற்றம்
பழகறி விற்பெரி யோரதமைப்
பற்றலர் பற்றுமன்பின்
குழகறி வேற்பினுள் ஒன்றறி
யாரறி யாமைதெய்வம்
கிழகெறி யப்பட் டுலந்தார்
உலகிற் கிடந்தனரே.

[36]
கிடக்கும் ஒருபால் இரைக்கின்ற
பாம்பொரு பால்மதியம்
தொடக்குண் டிலங்கும் மலங்குந்
திரைக்கங்கை சூடுங்கொன்றை
வடக்குண்டு கட்டத் தலைமாலை
வாளால் மலைந்தவெம்போர்
கடக்கும் விடைத்திரு ஏகம்பர்
கற்றைச் சடைமுடியே.

[37]
கற்றைப் பவளச் சடைவலம்
பூக்கமழ் கொன்றையந்தார்
முற்றுற் றிலாமதி யின் கொழுந்
தேகம்பர் மொய்குழலாம்
மற்றைத் திசையின் மணிப்பொற்
கொழுந்தத் தரங்கழுநீர்
தெற்றிப் பொலிகின்ற சூட்டழ
காகித் திகழ்தருமே.

[38]
தருமருட் டன்மை வலப்பாற்
கமலக்கண் நெற்றியின்மேல்
திருமலர்க் கண்பிள விற்றிக
ழுந்தழல் செல்வக்கம்பர்
கருமலர்க் கண்ணிடப் பாலது
நீலங் கனிமதத்து
வருநுதற் பொட்டணங் குக்குயர்ந்
தோங்கும் மலர்க்குழலே.

[39]
மலர்ந்த படத்துச்சி ஐந்தினுஞ்
செஞ்சுடர் மாமணிவிட்
டலர்ந்த மணிக்குண் டலம்வலக்
காதினில் ஆடிவரும்
நலந்திரு நீல்வயி ரம்வெயிற்
பாய நகுமணிகள்
கலந்தசெம் பொன்மக ரக்குழை
ஏகம்பர் காதிடமே.

[40]
காதலைக் கும்வலத் தோள்பவ
ளக்குன்றம் அங்குயர்ந்து
போதலைக் கும்பனிப் பொன்மலை
நீற்றின் பொலியகலம்
தாதலைக் குங்குழல் சேர்பணைத்
தோள்நறுஞ் சாந்தணிந்து
சூதலைக் கும்முலை மார்பிடம்
ஏகம்பர் சுந்தரமே.

[41]
தரம்பொற் பழியும் உலகட்டி
எய்த்துத் தரந்தளரா
உரம்பொற் புடைய திருவயி
றாம்வலம் உம்பர்மும்மைப்
புரம்பொற் பழித்தகம் பர்க்குத்
தரத்திடு பூண்முலையும்
நிரம்பப் பொறாது தளரிள
வஞ்சியும் நேர்வுடைத்தே.

[42]
உடைப்புலி ஆடையின் மேலுர
கக்கச்சு வீக்கிமுஞ்சி
வடத்தொரு கோவணந் தோன்றும்
அரைவலம் மற்றையல்குல்
தொடக்குறு காஞ்சித் தொடுத்த
அரசிலை தூநுண்துகில்
அடல்பொலி ஏறுடை ஏகம்பம்
மேய அடிகளுக்கே.

[43]
அடிவலப் பாலது செந்தா
மரையொத் ததிர்கழல்சூழ்ந்
திடிகுரற் கூற்றின் எருத்திற
வைத்த திளந்தளிரின்
அடியிடப் பாலது பஞ்சுற
அஞ்சுஞ் சிலம்பணிந்த
வடிவுடைத் தார்கச்சி ஏகம்பம்
மேய வரதருக்கே.

[44]
தருக்கவற் றான் மிக்க முப்புரம்
எய்தயன் தன்தலையை
நெருக்கவற் றோட மழுவாள்
விசைத்தது நெற்களென்றும்
பருக்கவற் றாங்கச்சி ஏகம்பர்
அத்தர்தம் பாம்புகளின்
திருக்கவற் றாலிட் டருளும்
கடகத் திருக்கரமே.

[45]
கரத்தத் தமருகத் தோசை
கடுத்தண்டம் மீபிளப்ப
அரத்தத்த பாதம் நெரித்திட்
டவனி தலம்நெரியத்
தரத்தத் திசைகளுக் கப்புறம்
போர்ப்பச் சடைவிரித்து
வரத்தைத் தருகம்பர்
ஆடுவர் எல்லியும் மாநடமே.

[46]
நடனம் பிரானுகந் துய்யக்கொண்
டானென்று நான்மறையோர்
உடன்வந்து மூவா யிரவர்
இறைஞ்சி நிறைந்தஉண்மைக்
கடனன்றி மற்றறி யாத்தில்லை
அம்பலங் காளத்தியாம்
இடமெம் பிரான்கச்சி ஏகம்பம்
மேயாற் கினியனவே.

[47]
இனியவர் இன்னார் அவரையொப்
பார்பிறர் என்னவொண்ணாத்
தனியவர் தையல் உடனாம்
உருவர் அறம்பணித்த
முனியவர் ஏறும் உகந்தமுக்
கண்ணவர் சண்டியன்புக்
கினியவர் காய்மழு வாட்படை
யார்கச்சி ஏகம்பரே.

[48]
பரவித் தனைநினை யக்கச்சி
ஏகம்பர் பண்ணும்மையல்
வரவித் தனைஉள்ள எங்கறிந்
தேன்முன் அவர்மகனார்
புரவித் தனையடிக் கக்கொடி
தாய்விடி யாவிரவில்
அரவித் தனையுங்கொண் டார்மட
வார்முன்றில் ஆட்டிடவே.

[49]
இடவம் கறுக்கெனப் பாயுமுஞ்
சென்னி நகுதலைகண்
டிடவஞ் சுவர்மட வாரிரி
கின்றனர் ஏகம்பத்தீர்
படமஞ்சு வாயது நாகம்
இரைக்கும் அதனுக்குமுற்
படமஞ் சுவரெங்ங னேபலி
வந்திடும் பாங்குகளே.

[50]
பாங்குடை கோள்புலி யின்னதள்
கொண்டீர்நும் பாரிடங்கள்
தாங்குடை கொள்ளப் பலிகொள்ள
வந்தீர் தடக்கமலம்
பூங்குடை கொள்ளப் புனற்கச்சி
ஏகம்பம் கோயில்கொண்டீர்
ஈங்கிடை கொள்ளக் கலைகொள்ள
வந்தீர் இடைகுமின்றே.

[51]
இடைக்குமின் தோற்கும் இணைமுலை
யாய்முதியார்கள் தஞ்சொல்
கடைக்கண்நன் றாங்கச்சி
ஏகம்பர் ஐயங் கொளக்கடவும்
விடைக்குமுன் தோற்றநில் லேநின்
றினியிந்த மொய்குழலார்
கிடைக்குமுன் தோற்றநஞ் சங்கிது
வோதங் கிறித்துவமே.

[52]
கிறிபல பேசிச் சதிரால்
நடந்து விடங்குபடக்
குறிபல பாடிக் குளிர்கச்சி
ஏகம்பர் ஐயங்கொள்ள
நெறிபல வார்குழ லார்மெலி
வுற்ற நெடுந்தெருவில்
செறிபல வெள்வளை போயின
தாயர்கள் தேடுவரே.

[53]
தேடுற் றிலகள்ள நோக்கந்
தெரிந்தில சொற்கள்முடி
கூடுற் றிலகுழல் கொங்கை
பொடித்தில கூறுமிவள்
மாடுற் றிலமணி யின்மட
வல்குலும் மற்றிவள்பால்
நாடுற் றிலவெழில் ஏகம்ப
னார்க்குள்ளம் நல்கிடத்தே.

[54]
நல்கும் புகழ்க்கட வூர்நன்
மறையவன் உய்யநண்ணிக்
கொல்கின்ற கூற்றைக் குமைத்தவெங்
கூற்றம் குளிர்திரைகள்
மல்கும் திருமறைக் காட்டமிர்
தென்றும் மலைமகள்தான்
புல்கும் பொழிற்கச்சி ஏகம்பம்
மேவிய பொன்மலையே.

[55]
மலையத் தகத்தியன் அர்ச்சிக்க
மன்னி வடகயிலை
நிலையத் தமரர் தொழவிருந்
தான்நெடு மேருவென்னும்
சிலையத்தன் பைம்பொன் மதில்திரு
ஏகம்பத் தான்திகழ்நீர்
அலையத் தடம்பொன்னி சூழ்திரு
வையாற் றருமணியே.

[56]
மணியார் அருவித் தடமிம
யங்குடக் கொல்லிகல்லின்
திணியார் அருவியின் ஆர்த்த
சிராமலை ஐவனங்கள்
அணியார் அருவி கவர்கிளி
ஒப்பும்இன் சாரல்விந்தம்
பணிவார் அருவினை தீர்க்குமே
கம்பர் பருப்பதமே.

[57]
பருப்பதம் சார்தவழ் மந்தரம்
இந்திர நீலம்வெள்ளை
மருப்பதங் கார்கருங் குன்றியங்
கும்பரங் குன்றம்வில்லார்
நெருப்பதங் காகுதி நாறும்
மகேந்திரம் என்றிவற்றில்
இருப்பதங் காவுகந் தான்கச்சி
ஏகம்பத் தெம்மிறையே.

[58]
இறைத்தார் புரமெய்த வில்லிமை
நல்லிம வான்மகட்கு
மறைத்தார் கருங்குன்றம் வெண்குன்றம்
செங்குன்ற மன்னற்குன்றம்
நிறைத்தார் நெடுங்குன்றம் நீள்கழுக்
குன்றமென் தீவினைகள்
குறைத்தார் முதுகுன்றம் ஏகம்பர்
குன்றென்று கூறுமினே.

[59]
கூறுமின் தொண்டர்குற் றாலம்நெய்த்
தானம் துருத்தியம்பேர்
தேறுமின் வேள்விக் குடிதிருத்
தோணி புரம்பழனம்
ஆறுமின் போல்சடை வைத்தவன்
ஆரூர் இடைமருதென்
றேறுமின் நீரெம் பிரான்கச்சி
ஏகம்பம் முன்நினைந்தே.

[60]
நினைவார்க் கருளும் பிரான்திருச்
சோற்றுத் துறைநியமம்
புனைவார் சடையோன் புகலூர்
புறம்பயம் பூவணம்நீர்ப்
பனைவார் பொழில்திரு வெண்காடு
பாச்சில் அதிகையென்று
நினைவார் தருநெஞ்சி னீர்கச்சி
ஏகம்பம் நண்ணுமினே.

[61]
நண்ணிப் பரவுந் திருவா
வடுதுறை நல்லம்நல்லூர்
மண்ணில் பொலிகடம் பூர்கடம்
பந்துறை மன்னுபுன்கூர்
எண்ணற் கரிய பராய்த்துறை
ஏர்கொள் எதிர்கொள்பாடி
கண்ணிப் பிறைச்சடை யோன்கச்சி
ஏகம்பம் காண்மின்சென்றே.

[62]
சென்றே விண்ணுறும் அண்ணா
மலைதிகழ் வல்லம்மென்பூ
வின்தேறல் பாய்திரு மாற்பேறு
பாசூர் எழிலழுந்தூர்
வன்தே ரவன்திரு விற்பெரும்
பேறு மதிலொற்றியூர்
நின்றேர் தருகச்சி ஏகம்பம்
மேயார் நிலாவியவே.

[63]
நிலாவு புகழ்த்திரு வோத்தூர்
திருஆமாத் தூர்நிறைநீர்
சுலாவு சடையோன் புலிவலம்
வில்வலம் கொச்சைதொண்டர்
குலாவு திருப்பனங் காடுநன்
மாகறல் கூற்றம்வந்தால்
அலாயென் றடியார்க் கருள்புரி
ஏகம்பர் ஆலயமே.

[64]
ஆலையங் கார்கரு காவைகச்
சூர்திருக் காரிகரை
வேலையங் கேறு திருவான்மி
யூர்திரு ஊறல்மிக்க
சோலையங் கார்திருப் போந்தைமுக்
கோணம் தொடர்கடுக்கை
மாலையன் வாழ்திரு வாலங்கா
டேகம்பம் வாழ்த்துமினே.

[65]
வாழப் பெரிதெமக் கின்னருள்
செய்யும் மலர்க்கழலோர்
தாழச் சடைத்திரு ஏகம்பர்
தம்மைத் தொழாதவர்போய்
வாழப் பரற்சுரம் ஆற்றா
தளிரடி பூங்குழலெம்
ஏழைக் கிடையிறுக் குங்குய
பாரம் இயக்குறினே.

[66]
உறுகின்ற வெவ்வழல் அக்கடம்
இக்கொடிக் குன்பின்வரப்
பெறுகின்ற வண்மையி னாலைய
பேரருள் ஏகம்பனார்
துறுகின்ற மென்மலர்த் தண்பொழிற்
கச்சியைச் சூழ்ந்திளையோர்
குறுகின்ற பூங்குவ ளைக்குறுந்
தண்பணை என்றுகொளே.

[67]
கொள்ளுங் கடுங்கதி ரிற்கள்ளி
தீச்சில வேயுலறி
விள்ளும் வெடிபடும் பாலையென்
பாவை விடலைபின்னே
தெள்ளும் புனற்கச்சி யுற்திரு
ஏகம்பர் சேவடியை
உள்ளும் அதுமறந் தாரெனப்
போவ துரைப்பரிதே.
[68]
பரிப்பருந் திண்மைப் படையது
கானர் எனிற்சிறகு
விரிப்பருந் துக்கிரை ஆக்கும்வெய்
யேன்அஞ்சல் செஞ்சடைமேல்
தரிப்பருந் திண்கங்கை யார்திரு
வேகம்பம் அன்னபொன்னே
வரிப்பருந் திண்சிலை யேயும
ராயின் மறைகுவனே.

[69]
வனவரித் திண்புலி யின்னதள்
ஏகம்ப மன்னருளே
எனவரு பொன்னணங் கென்னணங்
கிற்கென் எழிற்கழங்கும்
தனவரிப் பந்துங் கெடுத்தெனைப்
புல்லியும் இற்பிரிந்தே
இனவரிக்கல்லதர் செல்வதெங்
கேயொல்லும் ஏழைநெஞ்சே.

[70]
நெஞ்சார் தரவின்பம் செய்கழல்
ஏகம்பர் கச்சியன்னாள்
பஞ்சார் அடிவைத்த பாங்கிவை
ஆங்கவள் பெற்றெடுத்த
வெஞ்சார் வொழியத்தன் பின்செல
முன்செல் வெடுவெடென்ற
அஞ்சா அடுதிறற் காளைதன்
போக்கிவை அந்தத்திலே.

[71]
இலவவெங் கான்உனை யல்லால்
தொழேஞ்சரண் ஏகம்பனார்
நிலவுஞ் சுடரொளி வெய்யவ
னேதண் மலர்மிதித்துச்
செலவும் பருக்கை குளிரத்
தளிரடி செல்கரத்துன்
உலவுங் கதிர்தணி வித்தருள்
செய்யுன் உறுதுணைக்கே.

[72]
துணையொத்த கோவையும் போலெழில்
பேதையும் தொன்றலுமுன்
இணையொத்த கொங்கையொ டேயொத்த
காதலொ டேகினரே
அணையத்தர் ஏறொத்த காளையைக்
கண்டனம் மற்றவரேல்
பிணையொத்த நோக்குடைப் பெண்ணிவள் தன்னொடும் பேசுமினே.

[73]
மின்நலிக் கும்வணக் கத்திடை
யாளையும் மீளியையும்
நென்னலிப் பாக்கைவந் தெய்தின
ரேலெம் மனையிற்கண்டீர்
பின்னரிப் போக்கருங் குன்று
கடந்தவர் இன்றுகம்பர்
மன்அரி தேர்ந்து தொழுங்கச்சி
நாட்டிடை வைகுவரே.

[74]
உவரச்சொல் வேடுடைக் காடுகந்
தாடிய ஏகம்பனார்
அவரக்கன் போன விமானத்தை
ஆயிரம் உண்மைசுற்றும்
துவரச் சிகரச் சிவாலயம்
சூலம் துலங்குவிண்மேல்
கவரக் கொடிதிளைக் குங்கச்சி
காணினுங் கார்மயிலே.

[75]
கார்மிக்க கண்டத் தெழில்திரு
ஏகம்பர் கச்சியின்வாய்
ஏர்மிக்க சேற்றெழில் நெல்நடு
வோரொலி பொன்மலைபோல்
போர்மிக்க செந்நெல் குவிப்போர்
ஒலிகருப் பாலையொலி
நீர்மிக்க மாக்கட லின்னொலி
யேயொக்கும் நேரிழையே.

[76]
நேர்த்தமை யாமை விறற்கொடு
வேடர் நெடுஞ்சுரத்தைப்
பார்த்தமை யாலிமை தீந்தகண்
பொன்னே பகட்டுரிவை
போர்த்தமை யாலுமை நோக்கருங்
கம்பர்கச் சிப்பொழிலுள்
சேர்த்தமை யாலிமைப் போதணி
சீதஞ் சிறந்தனவே.

[77]
சிறைவண்டு பாடுங் கமலம்
கிடங்கிவை செம்பழுக்காய்
நிறைகொண்ட பாளைக் கமுகின்
பொழிலிவை தீங்கனியின்
பொறைகொண்ட வாழைப் பொதும்புவை
புன்சடை ஏகம்பனார்
நறைகொண்ட பூங்கச்சி நாடெங்கும்
இவ்வண்ணம் நன்னுதலே.

[78]
நன்னுத லார்கருங் கண்ணுஞ்செவ்
வாயுமிவ் வாறெனப்போய்
மன்னித ழார்திரு நீலமும்
ஆம்பலும் பூப்பவள்ளை
என்னவெ லாமொப்புக் காதென்று
வீறிடும் ஏகம்பனார்
பொன்னுத லார்விழி யார்கச்சி
நாட்டுள்இப் பொய்கையுளே.

[79]
உள்வார் குளிர நெருங்கிக்
கருங்கிடங் கிட்டநன்னீர்
வள்வா ளைகளொடு செங்கயல்
மேய்கின்ற எங்களையாட்
கொள்வார் பிறவி கொடாதவே
கம்பர் குளிர்குவளை
கள்வார் தருகச்சி நாட்டெழில்
ஏரிக் களப்பரப்பே.

[80]
பரப்பார் விசும்பிற் படிந்த
கருமுகில் அன்னநன்னீர்
தரப்பா சிகள்மிகு பண்பொடு
சேம்படர் தண்பணைவாய்ச்
சுரப்பார் எருமை மலர்தின்னத்
துன்னு கராவொருத்தல்
பொரப்பார் பொலிநுத லாய்செல்வக்
கம்பர்தம் பூங்கச்சியே.

[81]
கச்சார் முலைமலை மங்கைகண்
ணாரஎண் ணான்கறமும்
வைச்சார் மகிழ்திரு ஏகம்பர்
தேவி மகிழவிண்ணோர்
விச்சா தரர்தொழு கின்ற
விமானமுந் தன்மமறா
அச்சா லையும்பரப் பாங்கணி
மாடங்கள் ஓங்கினவே.

[82]
ஓங்கின ஊரகம் உள்ளகம்
உம்பர் உருகிடமாம்
பாங்கினில் நின்ற தரியுறை
பாடகம் தெவ்இரிய
வாங்கின வாட்கண்ணி மற்றவர்
மைத்துனி வான்கவிகள்
தாங்கின நாட்டிருந் தாளது
தன்மனை ஆயிழையே.

[83]
இழையார் அரவணி ஏகம்பர்
நெற்றி விழியின்வந்த
பிழையா அருள்நம் பிராட்டிய
தின்ன பிறங்கலுன்னும்
நுழையா வருதிரி சூலத்தள்
நோக்கரும் பொன்கடுக்கைத்
தழையார் பொழில்உது பொன்னே
நமக்குத் தளர்வில்லையே.

[84]
தளரா மிகுவெள்ளம் கண்டுமை
ஓடித் தமைத்ததழுவக்
கிளையார் வளைக்கை வடுப்படும்
ஈங்கோர் கிறிபடுத்தார்
வளமாப் பொழில்திரு ஏகம்பம்
மற்றிது வந்திறைஞ்சி
உளரா வதுபடைத் தோம்மட
வாயிவ் வுலகத்துளே.

[85]
உலவிய மின்வடம் வீசி
உருமதிர் வுள்முழங்கி
வலவிய மாமதம் பாய்முகில்
யானைகள் வானில்வந்தால்
சுலவிய வார்குழல் பின்னரென்
பாரிர் எனநினைந்து
நிலவிய ஏகம்பர் கோயிற்
கொடியன்ன நீர்மையனே.

[86]
நீரென்னி லும்அழுங் கண்முகில்
காள்நெஞ்சம் அஞ்சலையென்
றாரென்னி லுந்தம ராயுரைப்
பார்அம ராவதிக்கு
நேரென்னி லுந்தகும் கச்சியுள்
ஏகம்பர் நீள்மதில்வாய்ச்
சேரென்னி லுந்தங்கும் வாட்கண்ணி
தானன்பர் தேர்வரவே.

[87]
வரங்கொண் டிமையோர் நலங்கொள்ளும்
ஏகம்பர் கச்சியன்னாய்
பரங்கொங்கை தூவன்மின் நீர்முத்தம்
அன்பர்தம் தேரின்முன்னே
தரங்கொண்டு பூக்கொண்டு கொன்றைபொன்
னாகத்தண் காந்தட்கொத்தின்
கரங்கொண்டு பொற்சுண்ணம் ஏந்தவும்
போந்தன கார்முகிலே.

[88]
கார்முகம் ஆரவண் கைக்கொண்ட
கம்பர் கழல்தொழுது
போர்முக மாப்பகை வெல்லச்சென்
றார்நினை யார்புணரி
நீர்முக மாக இருண்டு
சுரந்தது நேரிழைநாம்
ஆர்முக மாக வினைக்கடல்
நீந்தும் அயர்வுயிர்ப்பே.

[89]
உயிரா யினவன்பர் தேர்வரக்
கேட்டுமுன் வாட்டமுற்ற
பயிரார் புயல்பெற்ற தென்னநம்
பல்வளை பான்மைகளாம்
தயிரார்பால் நெய்யொடும் ஆடிய
ஏகம்பர் தம்மருள்போல்
கையிரா வளையழுந் தக்கச்
சிறுத்தன கார்மயிலே.

[90]
கார்விடை வண்ணத்தன் அன்றேழ்
தழுவினும் இன்றுதனிப்
போர்விடை பெற்றெதிர் மாண்டார்
எனவண்டர் போதவிட்டார்
தார்விடை ஏகம்பர் கச்சிப்
புறவிடைத் தம்பொன்நன்பூண்
மார்விடை வைகல் பெறுவார்
தழுவ மழவிடையே.

[91]
விடைபாய் கொடுமையெண் ணாதுமே
லாங்கன்னி வேல்கருங்கண்
கடைபாய் மனத்திளங் காளையர்
புல்கொலி கம்பர்கச்சி
மடைபாய் வயலிள முல்லையின்
மான்கன்றொ டான்கன்றினம்
கடைபாய் தொறும்பதி மன்றில்
கடல்போற் கலந்தெழுமே.

[92]
எழுமலர்த் தண்பொழில் ஏகம்பர்
கச்சி இருங்கடல்வாய்க்
கொழுமணப் புன்னைத் துணர்மணற்
குன்றில் பரதர்கொம்பே
செழுமலர்ச் சேலல்ல வாளல்ல
வேலல்ல நீலமல்ல
முழுமலர்க் கூரம்பின் ஓரிரண்
டாலும் முகத்தனவே.

[93]
முகம்பாகம் பண்டமும் பாகமென்
றோதிய மூதுரையை
உகம்பார்த் திரேலென் நலமுயர்
ஏகம்பர் கச்சிமுன்நீர்
அகம்பாக ஆர்வின் அளவில்லை
என்னின் பவளச்செவ்வாய்
நகம்பால் பொழில்பெற்ற நாமுற்ற
வர்கொள்க நன்மயலே.

[94]
மயக்கத்த நல்லிருள் கொல்லும்
சுறவோ டெறிமகரம்
இயக்கத் திடுசுழி ஓதம்
கழிகிளர் அக்கழித்தார்
துயக்கத் தவர்க்கரு ளாக்கம்பர்
கச்சிக் கடலபொன்னூல்
முயக்கத் தகல்வு பொறாள்கொண்க
நீர்வரும் ஊர்க்கஞ்சுமே.

[95]
மேயிரை வைகஅக் குருகுண
ராமது உண்டுபுன்னை
மீயிரை வண்டோ தமர்புக்
கடிய விரிகடல்வாய்ப்
பாயிரை நாகம்கொண் டோன்தொழும்
கம்பர்கச் சிப்பவ்வநீர்
தூயிரை கானல்மற் றாரறி வார்நந்
துறைவர்பொய்யே.

[96]
பொய்வரு நெஞ்சினர் வஞ்சனை
யாரையும் போகவிடா
மெய்வரும் பேரருள் ஏகம்பர்
கச்சி விரையினவாய்க்
கைவரும் புள்ளொடு சங்கினம்
ஆர்ப்பநம் சேர்ப்பர்திண்தேர்
அவ்வரு தாமங் களினம்வந்
தார்ப்ப அணைகின்றதே.

[97]
இன்றுசெய் வோமித னில்திரு
ஏகம்பர்க் கெத்தனையும்
நன்றுசெய் வோம்பணி நாளையென்
றுள்ளிநெஞ் சேயுடலில்
சென்றுசெ யாரை விடும்துணை
நாளும் விடாதடிமை
நின்றுசெய் வாரவர் தங்களின்
நீள்நெறி காட்டுவரே.

[98]
காட்டிவைத் தார்தம்மை யாம்கடிப்
பூப்பெய்யக் காதல்வெள்ளம்
ஈட்டிவைத் தார்தொழும் ஏகம்பர்
ஏதும் இலாதவெம்மைப்
பூட்டிவைத் தார்தமக் கன்பது
பெற்றுப் பதிற்றுப்பத்துப்
பாட்டிவைத் தார்பர வித்தொழு
வாமவர் பாதங்களே.

[99]
பாதம் பரவியொர் பித்துப்
பிதற்றினும் பல்பணியும்
ஏதம் புகுதா வகையருள்
ஏகம்பர் ஏத்தெனவே
போதம் பொருளால் பொலியாத
புன்சொல் பனுவல்களும்
வேதம் பொலியும் பொருளாம்
எனக்கொள்வர் மெய்த்தொண்டரே.

[100]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.012   மறையானை, மாசு இலாப் புன்சடை  
பண் - இந்தளம்   (திருத்தலம் கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ; (திருத்தலம் அருள்தரு காமாட்சியம்மை உடனுறை அருள்மிகு ஏகாம்பரநாதர் திருவடிகள் போற்றி )
மறையானை, மாசு இலாப் புன்சடை மல்கு வெண்
பிறையானை, பெண்ணொடு ஆண் ஆகிய பெம்மானை,
இறையானை, ஏர் கொள் கச்சித் திரு ஏகம்பத்து
உறைவானை, அல்லது உள்காது, எனது உள்ளமே.

[1]
நொச்சியே, வன்னி, கொன்றை, மதி, கூவிளம்,
உச்சியே புனைதல் வேடம்; விடைஊர்தியான்;
கச்சி ஏகம்பம் மேய கறைக்கண்டனை
நச்சியே தொழுமின்! நும்மேல் வினை நையுமே.

[2]
பார் ஆரும் முழவம், மொந்தை, குழல், யாழ், ஒலி
சீராலே பாடல் ஆடல் சிதைவுஇல்லது ஓர்
ஏர் ஆர் பூங் கச்சி ஏகம்பனை, எம்மானை,
சேராதார் இன்பம் ஆய நெறி சேராரே.

[3]
குன்று ஏய்க்கும் நெடுவெண்மாடக் கொடி கூடிப் போய்
மின் தேய்க்கும் முகில்கள் தோயும் வியன்கச்சியுள
மன்று ஏய்க்கும் மல்கு சீரால் மலி ஏகம்பம்
சென்று ஏய்க்கும் சிந்தையார்மேல் வினை சேராவே.

[4]
சடையானை, தலை கை ஏந்திப் பலி தருவார்தம்
கடையே போய் மூன்றும் கொண்டான் கலிக் கச்சியுள
புடையே பொன் மலரும் கம்பைக்கரை ஏகம்பம்
உடையானை, அல்லது உள்காது, எனது உள்ளமே.

[5]
மழுவாளோடு எழில் கொள் சூலப்படைவல்லார்தம்
கெழு வாளோர், இமையார், உச்சி உமையாள் கங்கை
வழுவாமே மல்கு சீரால் வளர் ஏகம்பம்
தொழுவாரே விழுமியார்; மேல்வினை துன்னாவே.

[6]
விண் உளார்; மறைகள்வேதம் விரித்து ஓதுவார்
கண் உளார்; கழலின் வெல்வார், கரி காலனை;
நண்ணுவார் எழில் கொள் கச்சிநகர் ஏகம்பத்து
அண்ணலார்; ஆடுகின்ற அலங்காரமே!

[7]
தூயானை, தூய ஆய மறை ஓதிய
வாயானை, வாள் அரக்கன் வலி வாட்டிய
தீயானை, தீது இல் கச்சித் திரு ஏகம்பம்
மேயானை, மேவுவார் என் தலைமேலாரே.

[8]
நாகம் பூண்; ஏறுஅது ஏறல்; நறுங்கொன்றை, தார்;
பாகம் பெண்; பலியும் ஏற்பர்; மறை பாடுவர்;
ஏகம்பம் மேவி ஆடும் இறை இருவர்க்கும்
மா கம்பம் அறியும் வண்ணத்தவன் அல்லனே!

[9]
போதியார், பிண்டியார், என்று இவர் பொய்ந்நூலை
வாதியா வம்மின்! அம் மா எனும் கச்சியுள
ஆதியார் மேவி ஆடும் திரு ஏகம்பம்
நீதியால் தொழுமின்! நும்மேல் வினை நில்லாவே.

[10]
அம் தண் பூங்கச்சி ஏகம்பனை, அம்மானை,
கந்து அண் பூங்காழிஊரன் கலிக்கோவையால்
சந்தமே பாட வல்ல தமிழ் ஞானசம்
பந்தன் சொல் பாடி ஆட, கெடும், பாவமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.041   கரு ஆர் கச்சித் திரு  
பண் - கொல்லி   (திருத்தலம் கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ; (திருத்தலம் அருள்தரு காமாட்சியம்மை உடனுறை அருள்மிகு ஏகாம்பரநாதர் திருவடிகள் போற்றி )
கரு ஆர் கச்சித் திரு ஏகம்பத்து
ஒருவா! என்ன, மருவா, வினையே.

[1]
மதி ஆர் கச்சி, நதி ஏகம்பம்
விதியால் ஏத்த, பதி ஆவாரே.

[2]
கலி ஆர் கச்சி, மலி ஏகம்பம்
பலியால் போற்ற, நலியா, வினையே.

[3]
வரம் ஆர் கச்சிப்புரம் ஏகம்பம்
பரவா ஏத்த, விரவா, வினையே.

[4]
படம் ஆர் கச்சி, இடம் ஏகம்பத்து
உடையாய்! என்ன, அடையா, வினையே.

[5]
நலம் ஆர் கச்சி, நிலவு ஏகம்பம்
குலவா ஏத்த, கலவா, வினையே.

[6]
கரியின் உரியன், திரு ஏகம்பன்,
பெரிய புரம் மூன்று எரிசெய்தானே.

[7]
இலங்கை அரசைத் துலங்க ஊன்றும்
நலம் கொள் கம்பன் இலங்கு சரணே.

[8]
மறையோன், அரியும், அறியா அனலன்
நெறி ஏகம்பம் குறியால் தொழுமே!

[9]
பறியாத் தேரர் நெறி இல் கச்சிச்
செறிகொள் கம்பம் குறுகுவோமே.

[10]
கொச்சை வேந்தன் கச்சிக் கம்பம்
மெச்சும் சொல்லை, நச்சும், புகழே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.114   பாயும் மால்விடைமேல் ஒரு பாகனே;  
பண் - பழம்பஞ்சுரம்   (திருத்தலம் கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ; (திருத்தலம் அருள்தரு காமாட்சியம்மை உடனுறை அருள்மிகு ஏகாம்பரநாதர் திருவடிகள் போற்றி )
பாயும் மால்விடைமேல் ஒரு பாகனே; பாவை தன் உருமேல் ஒரு பாகனே;
தூய வானவர் வேதத் துவனியே; சோதி மால் எரி வேதத்து வ(ன்)னியே;
ஆயும் நன்பொருள் நுண்பொருள் ஆதியே; ஆலநீழல்
அரும்பொருள் ஆதியே;
காய, வில் மதன் பட்டது கம்பமே; கண் நுதல் பரமற்கு
இடம் கம்பமே.

[1]
சடை அணிந்ததும் வெண்டு அலைமாலையே; தம் உடம்பிலும்
வெண்தலைமாலையே;
படையில் அம் கையில் சூல் அம் அது என்பதே; பரந்து
இலங்கு ஐயில் சூலம் அது என்பதே;
புடை பரப்பன, பூதகணங்களே; போற்று இசைப்பன, பூதகணங்களே
கடைகள்தோறும் இரப்பதும் மிச்சையே; கம்பம் மேவி
இருப்பதும் இச்சையே.

[2]
வெள் எருக்கொடு தும்பை மிலைச்சியே; ஏறு முன் செலத்
தும்பை மிலைச்சியே!
அள்ளி நீறு அது பூசுவ தாகமே; ஆன மாசுணம் மூசுவது ஆகமே;
புள்ளி ஆடை உடுப்பது கத்துமே; போன, ஊழி, உடுப்பது உகத்துமே;
கள் உலாம் மலர்க் கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர்க்
கம்பம் இருப்பு அதே.

[3]
முற்றல் ஆமை அணிந்த முதல்வரே; மூரி ஆமை அணிந்த முதல்வரே;
பற்றி வாள் அரவு ஆட்டும் பரிசரே; பாலும் நெய் உகந்து
ஆட்டும் பரிசரே;
வற்றல் ஓடு கலம், பலி தேர்வதே; வானினோடு கலம், பலி, தேர்வதே,
கற்றிலா மனம் கம்பம் இருப்பதே; காஞ்சி மா நகர்க் கம்பம் இருப்பதே.

[4]
வேடன் ஆகி விசையற்கு அருளியே; வேலை நஞ்சம்
மிசையல் கருளியே;
ஆடுபாம்பு அரை ஆர்த்தது உடை அதே; அஞ்சு பூதமும்
ஆர்த்தது உடையதே;
கோடு வான்மதிக்கண்ணி அழகிதே; குற்றம் இல் மதிக் கண்ணி அழகிதே;
காடு வாழ் பதி ஆவதும் உ(ம்)மது; ஏகம்பம் மா பதி
ஆவதும் உ(ம்)மதே.

[5]
இரும் புகைக்கொடி தங்கு அழல் கையதே; இமயமாமகள், தம் கழல், கையதே;
அரும்பு மொய்த்த மலர்ப் பொறை தாங்கியே; ஆழியான்
தன் மலர்ப் பொறை தாங்கியே;
பெரும் பகல் நடம் ஆடுதல் செய்துமே, பேதைமார் மனம் வாடுதல் செய்துமே,
கரும்பு மொய்த்து எழு கம்பம் இருப்பதே, காஞ்சி மா
நகர்க் கம்பம் இருப்பு அதே.

[6]
முதிரம் மங்கை தவம் செய்த காலமே, முன்பும், அம்
கைதவம் செய்த காலமே,
வெதிர்களோடு அகில் சந்தம் முருட்டியே, வேழம் ஓடகில்
சந்தம் உருட்டியே,
அதிர ஆறு வரத்து அழுவத்தொடே, ஆன் ஐ ஆடுவரத் தழுவத்தொடே,
கதிர் கொள் பூண் முலைக் கம்பம் இருப்பதே; காஞ்சி மா
நகர்க் கம்பம் இருப்பதே.

[7]
பண்டு அரக்கன் எடுத்த பலத்தையே பாய்ந்து அரக்கல்
நெடுத்த (அ)பலத்தையே
கொண்டு, அரக்கியதும் கால்விரலையே; கோள் அரக்கியதும் கால்வு இரலையே;
உண்டு உழன்றதும் முண்டத் தலையிலே; உடுபதிக்கு இடம்
உண்டு, அத் தலையிலே;
கண்டம் நஞ்சம் அடக்கினை கம்பமே; கடவுள் நீ இடம்
கொண்டது கம்பமே.

[8]
தூணி ஆன சுடர்விடு சோதியே சுத்தம் ஆன சுடர்விடு சோதியே;
பேணி ஓடு பிரமப் பறவையே பித்தன் ஆன பிரமப் பறவையே,
சேணினோடு, கீழ், ஊழி திரிந்துமே, சித்தமோடு கீழ், ஊழி திரிந்துமே,
காண நின்றனர் உற்றது கம்பமே; கடவுள் நீ இடம் உற்றது கம்பமே.

[9]
ஓர் உடம்பினை ஈர் உரு ஆகவே, உன் பொருள்-திறம் ஈர் உரு ஆகவே,
ஆரும் மெய்தன் கரிது பெரிதுமே; ஆற்ற எய்தற்கு அரிது, பெரிதுமே;
தேரரும் அறியாது திகைப்பரே; சித்தமும் மறியா, துதி கைப்பரே;
கார் நிறத்து அமணர்க்கு ஒரு கம்பமே; கடவுள் நீ இடம்
கொண்டது கம்பமே.

[10]
கந்தம் ஆர் பொழில் சூழ்தரு கம்பமே காதல் செய்பவர்
தீர்த்திடு உகு அம்பமே;
புந்தி செய்வது விரும்பிப் புகலியே பூசுரன் தன் விரும்பிப் புகலியே
அந்தம் இல் பொருள் ஆயின கொண்டுமே, அண்ணலின்
பொருள் ஆயின கொண்டுமே,
பந்தன் இன் இயல் பாடிய பத்துமே பாட வல்லவர் ஆயின,
பத்துமே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.007   கரவு ஆடும் வன்நெஞ்சர்க்கு அரியானை;  
பண் - காந்தாரம்   (திருத்தலம் கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ; (திருத்தலம் அருள்தரு காமாட்சியம்மை உடனுறை அருள்மிகு ஏகாம்பரநாதர் திருவடிகள் போற்றி )
கரவு ஆடும் வன்நெஞ்சர்க்கு அரியானை; கரவார்பால்
விரவாடும் பெருமானை; விடை ஏறும் வித்தகனை;
அரவு ஆட, சடை தாழ, அங்கையினில் அனல் ஏந்தி,
இரவு ஆடும் பெருமானை;-என் மனத்தே வைத்தேனே!

[1]
தேன் நோக்கும் கிளிமழலை உமை கேள்வன், செழும் பவளம்
தான் நோக்கும் திருமேனி தழல் உரு ஆம் சங்கரனை;
வான் நோக்கும் வளர்மதி சேர் சடையானை; வானோர்க்கும்
ஏனோர்க்கும் பெருமானை;-என் மனத்தே வைத்தேனே!

[2]
கைப் போது மலர் தூவி, காதலித்து, வானோர்கள்
முப்போதும் முடி சாய்த்து, தொழ நின்ற முதல்வனை;
அப்போடு மலர் தூவி, ஐம்புலனும் அகத்து அடக்கி,
எப்போதும் இனியானை:-என் மனத்தே வைத்தேனே!

[3]
அண்டம் ஆய், ஆதி ஆய், அருமறையோடு ஐம்பூதப்
பிண்டம் ஆய், உலகுக்கு ஒர் பெய் பொருள் ஆம் பிஞ்ஞகனை;
தொண்டர் தாம் மலர் தூவிச் சொல் மாலை புனைகின்ற
இண்டை சேர் சடையானை;-என் மனத்தே வைத்தேனே!

[4]
ஆறு ஏறு சடையானை, ஆயிரம் பேர் அம்மானை,
பாறு ஏறு படுதலையில் பலி கொள்ளும் பரம்பரனை,
நீறு ஏறு திருமேனி நின்மலனை, நெடுந் தூவி
ஏறு ஏறும் பெருமானை;-என் மனத்தே வைத்தேனே!

[5]
தேசனை; தேசங்கள் தொழ நின்ற திருமாலால்
பூசனை; சனைகள் உகப்பானை; பூவின் கண்
வாசனை; மலை, நிலம், நீர், தீ, வளி, ஆகாசம், ஆம்
ஈசனை; எம்மானை;-என் மனத்தே வைத்தேனே!

[6]
நல்லானை, நல் ஆன நால்மறையோடு ஆறு அங்கம்
வல்லானை, வல்லார்கள் மனத்து உறையும் மைந்தனை,
சொல்லானை, சொல் ஆர்ந்த பொருளானை, துகள் ஏதும்
இல்லானை, எம்மானை;-என் மனத்தே வைத்தேனே!

[7]
விரித்தானை, நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்
புரித்தானை, பதம் சந்தி; பொருள் உரு ஆம் புண்ணியனை;
தரித்தானை, கங்கை நீர், தாழ் சடை மேல்; மதில் மூன்றும்
எரித்தானை; எம்மானை;-என் மனத்தே வைத்தேனே!

[8]
ஆகம் பத்து அரவு அணையான், அயன், அறிதற்கு அரியானை;
பாகம் பெண் ஆண் பாகம் ஆய் நின்ற பசு பதியை;
மா கம்பம் மறை ஓதும் இறையானை; மதில் கச்சி
ஏகம்பம் மேயானை;-என் மனத்தே வைத்தேனே!

[9]
அடுத்த ஆனை உரித்தானை; அருச்சுனற்குப் பாசுபதம்
கொடுத்தானை; குலவரையே சிலை ஆகக் கூர் அம்பு
தொடுத்தானை, புரம் எரிய; சுனை மல்கு கயிலாயம்
எடுத்தானைத் தடுத்தானை;-என் மனத்தே வைத்தேனே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.044   நம்பனை, நகரம் மூன்றும் எரியுண  
பண் - திருநேரிசை   (திருத்தலம் கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ; (திருத்தலம் அருள்தரு காமாட்சியம்மை உடனுறை அருள்மிகு ஏகாம்பரநாதர் திருவடிகள் போற்றி )
நம்பனை, நகரம் மூன்றும் எரியுண வெருவ நோக்கும்
அம்பனை, அமுதை, ஆற்றை, அணி பொழில் கச்சியுள் ஏ-
கம்பனை, கதிர் வெண்திங்கள் செஞ்சடைக் கடவுள் தன்னை;
செம்பொனை, பவளத்தூணை, சிந்தியா எழுகின்றேனே.

[1]
ஒரு முழம் உள்ள குட்டம், ஒன்பது துளை உடைத்து ஆய்;
அரை முழம் அதன் அக(ல்)லம்; அதனில் வாழ் முதலை ஐந்து;
பெரு முழை வாய் தல் பற்றிக் கிடந்து நான் பிதற்றுகின்றேன்
கருமுகில் தவழும் மாடக் கச்சி ஏகம்பனீரே!

[2]
மலையினார் மகள் ஓர் பாகம் மைந்தனார், மழு ஒன்று ஏந்திச்
சிலையினால் மதில்கள் மூன்றும் தீ எழச் செற்ற செல்வர்,
இலையின் ஆர் சூலம் ஏந்தி ஏகம்பம் மேவினாரை,
தலையினால் வணங்க வல்லார் தலைவர்க்கும் தலைவர் தாமே!

[3]
பூத்த பொன் கொன்றமாலை புரி சடைக்கு அணிந்த செல்வர்
தீர்த்தம் ஆம் கங்கையாளைத் திருமுடி திகழ வைத்து(வ்)
ஏத்துவார் ஏத்த நின்ற ஏகம்பம் மேவினாரை,
வாழ்த்தும் ஆறு அறியமாட்டேன்; மால்கொடு மயங்கினேனே!

[4]
மையின் ஆர் மலர் நெடுங்கண் மங்கை ஓர் பங்கர் ஆகி,
கையில் ஓர் கபாலம் ஏந்தி, கடை தொறும் பலி கொள்வார், தாம்
எய்வது ஓர் ஏனம் ஓட்டி ஏகம்பம் மேவினாரை,
கையினால் -தொழ வல்லார்க்குக் கடுவினை களையல் ஆமே.

[5]
தரு வினை மருவும் கங்கை தங்கிய சடையன், எங்கள்
அரு வினை அகல நல்கும் அண்ணலை, அமரர் போற்றும்
திரு வினை, திரு ஏகம்பம் செப்பட உறைய வல்ல
உரு வினை, உருகி ஆங்கே உள்ளத்தால் உகக்கின்றேனே.!

[6]
கொண்டது ஓர் கோலம் ஆகிக் கோலக்கா உடைய கூத்தன்,
உண்டது ஓர் நஞ்சம் ஆகி உலகு எலாம் உய்ய உண்டான்,
எண் திசையோரும் ஏத்த நின்ற ஏகம்பன் தன்னை,
கண்டு நான் அடிமை செய்வான் கருதியே திரிகின்றேனே.

[7]
படம் உடை அரவினோடு பனி மதி அதனைச் சூடி,
கடம் உடை உரிவை மூடிக் கண்டவர் அஞ்ச, அம்ம!
இடம் உடைக் கச்சி தன்னுள் ஏகம்பம் மேவினான் தன்
நடம் உடை ஆடல் காண ஞாலம் தான் உய்ந்த ஆறே!

[8]
பொன் திகழ் கொன்றை மாலை பொருந்திய நெடுந் தண் மார்பர்
நன்றியின் புகுந்து என் உள்ளம் மெள்ளவே நவில நின்று,
குன்றியில் அடுத்த மேனிக் குவளை அம் கண்டர்; எம்மை
இன் துயில் போது கண்டார்; இனியர்-ஏகம்பனாரே.

[9]
துருத்தியார், பழனத்து உள்ளார், தொண்டர்கள் பலரும் ஏத்த
அருத்தியால் அன்பு செய்வார் அவர் அவர்க்கு அருள்கள் செய்து(வ்)
எருத்தினை இசைய ஏறி ஏகம்பம் மேவினார்க்கு
வருத்தி நின்று அடிமை செய்வார் வல்வினை மாயும் அன்றே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.099   ஓதுவித்தாய், முன் அற உரை;  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ; (திருத்தலம் அருள்தரு அறம்வளர்த்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்பொன்சோதீசுரர் திருவடிகள் போற்றி )
ஓதுவித்தாய், முன் அற உரை; காட்டி அமணரொடே
காதுவித்தாய்; கட்டம், நோய், பிணி, தீர்த்தாய்; கலந்து அருளிப்
போதுவித்தாய்; நின் பணி பிழைக்கின் புளியம்வளாரால்
மோதுவிப்பாய்; உகப்பாய்; முனிவாய்-கச்சி ஏகம்பனே!

[1]
எத்தைக்கொடு எத்தகை ஏழை அமணொடு இசைவித்து,-எனை,-
கொத்தைக்கு மூங்கர் வழி காட்டுவித்தென்னக் கோகு செய்தாய்?-
முத்தின் திரளும் பளிங்கினின் சோதியும் மொய் பவளத்-
தொத்தினை ஏய்க்கும் படியாய்! பொழில் கச்சி ஏகம்பனே!

[2]
மெய் அம்பு கோத்த விசயனொடு அன்று ஒரு வேடுவனாய்ப்
பொய் அம்பு எய்து, ஆவம் அருளிச்செய்தாய்; புரம் மூன்று எரியக்
கை அம்பு எய்தாய்; நுன் கழல் அடி போற்றாக் கயவர் நெஞ்சில்
குய்யம் பெய்தாய்-கொடி மா மதில் சூழ் கச்சி ஏகம்பனே!

[3]
குறிக்கொண்டு இருந்து செந்தாமரை ஆயிரம் வைகல்வைகல்
நெறிப்பட இண்டை புனைகின்ற மாலை நிறை அழிப்பான்,
கறைக்கண்ட! நீ ஒரு பூக் குறைவித்துக் கண் சூல்விப்பதே?
பிறைத்துண்ட வார்சடையாய்! பெருங் காஞ்சி எம் பிஞ்ஞகனே!

[4]
உரைக்கும் கழிந்து இங்கு உணர்வு அரியான்; உள்குவார் வினையைக்
கரைக்கும் எனக் கைதொழுவது அல்லால், கதிரோர்கள் எல்லாம்,
விரைக்கொள் மலரவன், மால், எண்வசுக்கள், ஏகாதசர்கள்,
இரைக்கும் அமிர்தர்க்கு, அறிய ஒண்ணான் எங்கள் ஏகம்பனே.

[5]
கரு உற்ற நாள் முதல் ஆக உன் பாதமே காண்பதற்கு(வ்)
உருகிற்று, என் உள்ளமும்; நானும் கிடந்து அலந்து எய்த்தொழிந்தேன்;
திரு ஒற்றியூரா! திரு ஆலவாயா! திரு ஆரூரா!
ஒரு பற்று இலாமையும் கண்டு இரங்காய்-கச்சி ஏகம்பனே!

[6]
அரி, அயன், இந்திரன், சந்திராதித்தர், அமரர் எல்லாம்,
உரிய நின் கொற்றக் கடைத்தலையார் உணங்காக் கிடந்தார்;
புரிதரு புன் சடைப் போக முனிவர் புலம்புகின்றார்;-
எரிதரு செஞ்சடை ஏகம்ப!-என்னோ, திருக்குறிப்பே?

[7]
பாம்பு அரைச் சேர்த்திப் படரும் சடைமுடிப் பால்வண்ணனே!
கூம்பலைச் செய்த கரதலத்து அன்பர்கள் கூடிப் பல்-நாள்
சாம்பலைப் பூசி, தரையில் புரண்டு, நின் தாள் சரண் என்று
ஏம்பலிப்பார்கட்கு இரங்குகண்டாய்-கச்சி ஏகம்பனே!

[8]
ஏன்று கொண்டாய், என்னை; எம்பெருமான்! இனி, அல்லம் என்னில்,
சான்று கண்டாய் இவ் உலகம் எல்லாம்; தனியேன் என்று என்னை
ஊன்றி நின்றார் ஐவர்க்கு ஒற்றி வைத்தாய்; பின்னை ஒற்றி எல்லாம்
சோன்றுகொண்டாய்-கச்சி ஏகம்பம் மேய சுடர் வண்ணனே!

[9]
உந்தி நின்றார், உன் தன் ஓலக்கச் சூளைகள்; வாய்தல் பற்றித்
துன்றி நின்றார், தொல்லை வானவர் ஈட்டம்; பணி அறிவான்
வந்து நின்றார், அயனும் திருமாலும்;-மதில் கச்சியாய்!-
இந்த நின்றோம் இனி எங்ஙனமோ, வந்து இறைஞ்சுவதே?

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.047   பண்டு செய்த பழவினையின் பயன்  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ; (திருத்தலம் அருள்தரு காமாட்சியம்மை உடனுறை அருள்மிகு ஏகாம்பரநாதர் திருவடிகள் போற்றி )
பண்டு செய்த பழவினையின் பயன்
கண்டும் கண்டும், களித்திகாண், நெஞ்சமே!
வண்டு உலாம் மலர்ச் செஞ்சடை ஏகம்பன்
தொண்டனாய்த் திரியாய், துயர் தீரவே!

[1]
நச்சி நாளும் நயந்து அடியார் தொழ,
இச்சையால் உமை நங்கை வழிபட,-
கொச்சையார் குறுகார்-செறி தீம்பொழில்
கச்சி ஏகம்பமே கைதொழுமினே!

[2]
ஊன் நிலாவி இயங்கி, உலகு எலாம்
தான் உலாவிய தன்மையர் ஆகிலும்,
வான் உலாவிய பாணி பிறங்க, வெங்-
கானில் ஆடுவர்-கச்சி ஏகம்பரே.

[3]
இமையா முக்கணர், என் நெஞ்சத்து உள்ளவர்,
தமை யாரும்(ம்) அறிவு ஒண்ணாத் தகைமையர்,
இமையோர் ஏத்த இருந்தவன் ஏகம்பன்;
நமை ஆளும்(ம்) அவனைத் தொழுமின்களே!

[4]
மருந்தினோடு நல் சுற்றமும் மக்களும்
பொருந்தி நின்று, எனக்கு ஆய எம் புண்ணியன்;
கருந்தடங் கண்ணினாள் உமை கைதொழ
இருந்தவன் கச்சி ஏகம்பத்து எந்தையே.

[5]
பொருளினோடு நல் சுற்றமும் பற்று இலர்க்கு
அருளும் நன்மை தந்து, ஆய அரும்பொருள்;
சுருள் கொள் செஞ்சடையான்; கச்சி ஏகம்பம்
இருள் கெடச் சென்று கைதொழுது ஏத்துமே!

[6]
மூக்கு வாய் செவி கண் உடல் ஆகி வந்து
ஆக்கும் ஐவர்தம் ஆப்பை அவிழ்த்து, அருள்
நோக்குவான்; நமை நோய்வினை வாராமே
காக்கும் நாயகன் கச்சி ஏகம்பனே.

[7]
பண்ணில் ஓசை, பழத்தினில் இன்சுவை,
பெண்ணொடு ஆண் என்று பேசற்கு அரியவன்,
வண்ணம் இ(ல்)லி, வடிவு வேறு ஆயவன்,
கண்ணில் உள் மணி-கச்சி ஏகம்பனே.

[8]
திருவின் நாயகன் செம் மலர்மேல் அயன்
வெருவ, நீண்ட விளங்கு ஒளிச்சோதியான்;
ஒருவனாய், உணர்வு ஆய், உணர்வு அல்லது ஓர்
கருவுள் நாயகன் கச்சி ஏகம்பனே.

[9]
இடுகுநுண் இடை, ஏந்து இளமென்முலை,
வடிவின், மாதர் திறம் மனம் வையன்மின்!
பொடி கொள் மேனியன், பூம்பொழில் கச்சியுள்
அடிகள், எம்மை அருந்துயர் தீர்ப்பரே.

[10]
இலங்கை வேந்தன் இராவணன் சென்று தன்
விலங்கலை எடுக்க(வ்), விரல் ஊன்றலும்,
கலங்கி, கச்சி ஏகம்பவோ! என்றலும்,
நலம் கொள் செல்வு அளித்தான், எங்கள் நாதனே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.048   பூமேலானும் பூமகள் கேள்வனும் நாமே  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ; (திருத்தலம் அருள்தரு காமாட்சியம்மை உடனுறை அருள்மிகு ஏகாம்பரநாதர் திருவடிகள் போற்றி )
பூமேலானும் பூமகள் கேள்வனும்
நாமே தேவர்! எனாமை, நடுக்கு உற
தீ மேவும்(ம்) உருவா! திரு ஏகம்பா!
ஆமோ, அல்லல்பட, அடியோங்களே?

[1]
அருந் திறல்(ல்) அமரர் அயன் மாலொடு
திருந்த நின்று வழிபடத் தேவியோடு
இருந்தவன்(ன்) எழில் ஆர், கச்சி ஏகம்பம்
பொருந்தச் சென்று புடைபட்டு எழுதுமே.

[2]
கறை கொள் கண்டத்து எண்தோள் இறை முக்கணன்,
மறை கொள் நாவினன், வானவர்க்கு ஆதியான்,
உறையும் பூம்பொழில் சூழ் கச்சி ஏகம்பம்
முறைமையால் சென்று முந்தித் தொழுதுமே.

[3]
பொறிப் புலன்களைப் போக்கு அறுத்து, உள்ளத்தை
நெறிப்படுத்து, நினைந்தவர் சிந்தையுள்
அறிப்பு உறும்(ம்) அமுது ஆயவன் ஏகம்பம்
குறிப்பினால், சென்று, கூடி, தொழுதுமே.

[4]
சிந்தையுள் சிவம் ஆய் நின்ற செம்மையோடு
அந்திஆய், அனல் ஆய், புனல், வானம் ஆய்,
புந்திஆய், புகுந்து உள்ளம் நிறைந்த எம்
எந்தை ஏகம்பம் ஏத்தித் தொழுமினே!

[5]
சாக்கியத்தொடு மற்றும் சமண்படும்
பாக்கியம்(ம்) இலார் பாடு செலாது, உறப்
பூக் கொள் சேவடியான் கச்சி ஏகம்பம்
நாக்கொடு ஏத்தி, நயந்து, தொழுதுமே.

[6]
மூப்பினோடு முனிவு உறுத்து எம்தமை
ஆர்ப்பதன் முன், அணி அமரர்க்கு இறை
காப்பது ஆய கடிபொழில் ஏகம்பம்
சேர்ப்பு அது ஆக, நாம் சென்று அடைந்து உய்துமே.

[7]
ஆலும் மா மயில் சாயல் நல்லாரொடும்
சால நீ உறு மால் தவிர், நெஞ்சமே!
நீலமாமிடற்று அண்ணல் ஏகம்பனார்
கோல மா மலர்ப்பாதமே கும்பிடே!

[8]
பொய் அனைத்தையும் விட்டவர் புந்தியுள்
மெய்யனை, சுடர் வெண்மழு ஏந்திய
கையனை, கச்சி ஏகம்பம் மேவிய
ஐயனை, தொழுவார்க்கு இல்லை, அல்லலே.

[9]
அரக்கன் தன் வலி உன்னி, கயிலையை
நெருக்கிச் சென்று, எடுத்தான் முடிதோள் நெரித்து
இரக்க இன் இசை கேட்டவன் ஏகம்பம்,
தருக்கு அது ஆக நாம் சார்ந்து, தொழுதுமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.064   கூற்றுவன் காண், கூற்றுவனைக் குமைத்த  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) ; (திருத்தலம் அருள்தரு காமாட்சியம்மை உடனுறை அருள்மிகு ஏகாம்பரநாதர் திருவடிகள் போற்றி )
கூற்றுவன் காண், கூற்றுவனைக் குமைத்த கோன் காண், குவலயன் காண், குவலயத்தின் நீர் ஆனான் காண்,
காற்று அவன் காண், கனல் அவன் காண், கலிக்கும் மின் காண், கன பவளச்செம்மேனி கலந்த வெள்ளை
நீற்றவன் காண், நிலா ஊரும் சென்னியான் காண், நிறை ஆர்ந்த புனல் கங்கை நிமிர்சடை மேல்
ஏற்றவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

[1]
பரந்தவன் காண், பல் உயிர்கள் ஆகி எங்கும்; பணிந்து எழுவார் பாவமும் வினையும் போகத்
துரந்தவன் காண்; தூ மலர் அம் கண்ணியான் காண்; தோற்றம், நிலை, இறுதி, பொருள் ஆய் வந்த
மருந்து அவன் காண்; வையகங்கள் பொறை தீர்ப்பான்
காண்; மலர் தூவி நினைந்து எழுவார் உள்ளம் நீங்காது
இருந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

[2]
நீற்றவன் காண்; நீர் ஆகித் தீ ஆனான் காண்; நிறை மழுவும், தமருகமும், எரியும், கையில்-
தோற்றவன் காண்; தோற்றக் கேடு இல்லாதான் காண்; துணை இலி காண்; துணை என்று தொழுவார் உள்ளம்
போற்றவன் காண்; புகழ்கள் தமைப் படைத்தான் தான் காண்; பொறி அரவும், விரிசடை மேல், புனலும் கங்கை
ஏற்றவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

[3]
தாய் அவன் காண், உலகிற்கு; தன் ஒப்பு இல்லாத் தத்துவன் காண்; மலை மங்கை பங்கா! என்பார்
வாயவன் காண்; வரும் பிறவி நோய் தீர்ப்பான் காண், வானவர்க்கும் தானவர்க்கும் மண்ணுளோர்க்கும்;
சேயவன் காண், நினையார்க்கு; சித்தம் ஆரத் திருவடியே உள்கி நினைந்து எழுவார் உள்ளம்
ஏயவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

[4]
அடுத்த ஆனை உரித்தான் காண்.

[5]
அழித்தவன் காண், எயில் மூன்றும் அயில்வாய் அம்பால்; ஐயாறும் இடை மருதும் ஆள்வான் தான் காண்;
பழித்தவன் காண், அடையாரை; அடைவார் தங்கள் பற்று அவன் காண்; புற்று அரவம் நாணினான் காண்;
சுழித்தவன் காண், முடிக் கங்கை; அடியே போற்றும் தூய மா முனிவர்க்காப் பார்மேல் நிற்க
இழித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

[6]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list